Wednesday, January 22, 2014

தஞ்சை சோழர்கால சுதை ஓவியங்கள்- ஓவியர் ஆர்.ராஜராஜன்.

தமிழகத்தின் மிக உயர்ந்த தரத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் சில இடங்களில் மட்டுமே இன்று காணக்கூடிய நிலையில் உள்ளன. அவை சித்தன்ன வாசல் ஓவியங்கள்.மற்றொன்று தஞ்சை பெரியகோவிலில் "தட்சினமேரு " எனப்படும் விமானத்தின் உள்புற சுதை ஓவியம் ( true fresco painting ) இதைத் தவிர பனைமலை கோவில் சுதை ஓவியம் ,இது தற்போது மிக சிதைந்த நிலையில் உள்ளது.

தஞ்சை கோவிலின் சுதை ஓவியத் தொகுப்பு மிக உயர்ந்த படைப்பு.சோழர்களின் கலைரசனைக்கு காலக் கண்ணாடியாக திகழ்கிறது. கோவிலின் ஓர் பகுதியில் தீட்டப்பட்ட இந்த ஓவியம் ஏதோ ஓர் புராணக் காட்சியின் பதிவு மட்டுமல்ல. தமிழகத்தின் மிகப் பெரிய கோவிலின் கட்டுமானத்தை, வெகு நுட்பமான தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி எழுப்பப்பட்ட அரிய வகை கோவில் என்பதனையும் கடந்த வரலாற்று பெருமையை தாங்கிய ஓர் ஓவியப்பதிவு இது. கேட்க வியப்பாக இருக்கும் , ஆம் தஞ்சை பெரிய கோவிலைப்போல ஓர் கோவிலை முதலாம் ராஜேந்திரன் கங்கைகொண்டசோழபுரத்தில் எழுப்பினான். தஞ்சை பெரிய கோவிலை விட அதிக கலை நயமிக்க சிற்ப கருவூலமாக இரண்டாம் ராசராசன் தாராசுரத்தில் ஓர் கோவிலை எழுப்பினான். பிற்கால சோழர்கள் எண்ணற்ற கோவில்களை தொடர்சியாக அமைத்தாலும் தஞ்சை பெரிய கோவில் சுதை ஓவியங்களை பின்பற்றியோ,அதற்கு ஈடாகவோ வேறெங்கும் அமைக்க எந்த பேரரசரும் முயற்சிக்கவில்லை. காரணம் சுதை ஓவிய தொழில் நுட்பமும் ,அத்தைகைய எளிதன்று.இதுபோன்ற தரமான சுதை ஓவியங்களை உருவாககக்கூடிய பரவலான சூழல் அப்போது இருந்திருக்கவில்லை.இதன்றி ஓவியப் புலவர்களின் பற்றாக்குறையும் முதன்மை காரணமாக இருக்கக்கூடும்.
சுதை ஓவியம் என்பது எழில் மயமான காட்சிகளை உள்ளடக்கியது மட்டுமல்ல , தீட்டப்பட்ட ஓவியங்கள் கருங்கல்லால் எழுப்பப்படும் கோவில்களுக்கு ஈடாக ஆயிரம் வருடங்களை கடந்து நிறம் மங்காமலும், உதிர்ந்து கொட்டாமலும் வலிமை கொண்டதாக அத்தகைய சுதை ஓவியத் தொகுப்பு இருக்க வேண்டும்.

தஞ்சை சோழர்களின் சுதை ஓவியங்கள் மிக தரமான தொழில் நுட்பத்துடன் தீட்டப்பட்டதே. கி.பி.1003 க்கும் 1010 க்கும் இடையே எழுப்பப்பட்தாக கருதப்படும் தஞ்சை பெரிய கோவிலில் ஓவியப்பணிகள் கட்டுமான நிறைவு சமயத்தில் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருக்கலாம்.
கருங்கல் சுவரில் கல்லிடுக்குகள் பூசப்பட்டு, களிமண்ணை புளிக்கவைத்து, பசைப்பொருள்கள், பிசினிவகைகள்,தேங்காய் நார் சேர்த்து மூலப் பூச்சு பூசி, கருங்கல்லுக்கு ஈடாக உலரவிட்டு, சுண்ணாம்பு காரை அரைத்து அதில் முட்டை வெள்ளைக்கரு,கடுக்காய்,மற்றும் இதர பாஷாணங்கள்,தங்கப் பொடி கலந்து இரண்டாம் பூச்சு பூசியப்பின், செப்புக் கரணை கொண்டு நுண்சாந்து பூசி,மெருகிட்டு ஈரத்துணியால் மூடி,மஞ்சள் கிழங்கு, அல்லது கரி கொண்டு புனையா ஓவியம் தீட்டி, சுவர் ஈரம் மேவிட பச்சிலை சாறுகள் , செங்காவி, மஞ்சள், மாவிதை ,அவுரி,நுனுக்கப்பட்ட வண்ணப் பொடிகள் கலந்து தீர்ர்க்கமாக திட்டமிட்ட காட்சிப்படலத்தை ,தூரிகை கொண்டு ஈரச்சுவரில் வண்ணம் ஊடுருவிடும் லாவகத்தோடு ஓவியமாக்குதலே சுதை ஓவியம் . இவ்வாறு தவறில்லாமல் தீட்டப்படும் ஓவியம் நன்றாக பராமரிக்கப்பட்டால், குறைந்த பட்சம் ஆயிரம் வருடம் முதல் அதிக பட்சம் ஐந்தாயிரம் வருடங்கள் கூட நீடித்து வரலாறு பேசும்.

கி.பி. 1010 க்கு பிறகு தஞ்சையின் வரலாற்று சூழல் சரி வர தெரியவில்லை.ராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலை நகராக்கி ஆளத் துவங்கினான்.முதலாம் ராசராசன் பழையாறையில் கி.பி.1014 இல் இயற்கை எய்தினான். காலங்கள் ஓடின, சோழமண்டலம் பாண்டியர் வசமாகி பின் அவர்களது ஆட்சியும் மங்கிட கி.பி.1500 களில் பலவீணமான சோழமண்டலத்தை ஆந்திராவிலிருந்து வந்த நாயக்கர்கள் கை பற்றி ஆளத்துவங்கினர்.

நீண்ட காலம் ( சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் என கருதப்படுகிறது ) பூட்டப்பட்டு கிடந்த தஞ்சை பெரியகோவிலை சில திருப்பணிகளை செய்ய முற்பட்ட நாயக்க மன்னர்கள் சோழர்களின் சுதை ஓவியங்கள் மீது சுண்ணாம்பு கொண்டு பூசி நாயக்கர்களின் மரபு ஓவியங்களை தீட்டினார்கள். 400 வருடங்கள் நாயக்கர்களின் ஓவியங்களுக்கு கீழே மறைந்திருந்த சோழர்களின்சிவபுராண ஓவியங்கள் காலங்களால் சிதிலமடந்த சுண்ணாம்பு படலங்கள் வழியாக வெளிச்சத்தை காணதுவங்கின.

1930 களில் தமிழனின் கட்டிடக்கலை,சிற்பக்கலை,இலக்கியம் யாவும் சிறந்து நிற்க தமிழனின் ஓவியக்கலை எங்கே என தமிழகம் முழுவதும் தேடி அலைந்த அந்த மாமேதை,வரலாற்று ஆய்வாளர் தஞ்சை பெரிய கோவிலை அடைந்தார். அவர்தான் அண்ணாமலைப் பல்கலைகழக வரலாற்றுத்துறை பேராசிரியர். எஸ்.கே. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். சுண்ணாம்பு படலத்தை சற்று நீக்கிய பின் உள்ளிருந்து தரிசனம் தந்த சோழர்களின் ஓவியத் தொகுப்பை கண்ணுற்று ஆனந்த கூத்தாடினார். உடனடியாக மத்திய தொல்பொருள் துறைக்கு தகவல் அனுப்பிவிட்டு, நான்கு நாட்களுக்குள் ஹிந்து நாளிதழில் ஓர் கட்டுரை வாயிலாக தஞ்சை பெரிய கோவிலின் ஓவியத்தொகுப்பை நிகழ்கால வரலாற்றுக்கு வழங்கினார்.

இந்த ஓவியங்கள் தற்போது தொல் பொருள்துறையின் சீரமைப்பில் உள்ளது.

இது சிவ புராணக் காட்சிகளின் சங்கமம், தென்புற சுவரில் த்ட்சிணாமூர்த்தி ஓங்கி வளர்ந்த விருட்சத்தின் கீழே தவநெறி கமழ சீடர்களுக்கு (சனாதன முனிவர்களுக்கு) ஞானமொழி அருளும் காட்சி . இயற்கையின் சாயல் நிரம்பிய சூழல். மேற்குபுறச் சுவரில் திருவிளையாடல் காட்சி, வலது கோடியில் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் கயிலாயம் செல்லும் போது, முன்னே சேரன்மான் நாயனார் குதிரை மீது அமர்ந்து சுந்தரமூர்த்தி நாயனாரை பார்த்தபடி செல்ல யானைக்கு முன் செல்லும் குதிரை, பயந்த படி வேகமாக நடக்கிறது. அவர்களை வரவேற்று மகிழும் வானவர் நடனமாடி,அதற்கேற்ப தாளமிசைத்து குதூகலிக்கும் கொண்டாட்டம். கீழ் புறம் உறவினர் கூடி மகிழும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணக் காட்சி, பளபளக்கும் ஆடைகளுடன் உறவினர்கள் விருந்துண்டு மகிழும் தடபுடல். இடையே யாரும் எதிபாராத வன்னம் அடிமை சாசன ஓலை ஏந்தி கிழவனாக ,தாழங்குடையுடன் வந்து திருமணத்தை தடுத்து நிறுத்திடும் சிவபெருமான். வாதம் செய்து சுந்தர மூர்த்தி நாயனாரை அழைத்து சென்று திருவெண்ணை நல்லூர் கோவிலில் மறையும் காட்சி.மேற்கு சுவரின் நடுவில் வெந்த நீறு பூசிய கோலத்துடன் நடராசனின் திரு நடனம். அரசிகள் சூழ மன்னர் மனமுருக வேண்டும் காட்சி. இடது புரம் சற்று கீழாக கருவூர் தேவரும் அவருக்கு பின் உயர்ந்த மகுடத்துடன் அடக்கத்துடன் சோழ பெரு வேந்தன் ராசராசன் . இதுதான் தமிழக ஓவிய வரலாற்றின் முதல் அரையுருவ ஓவியம் என கருதலாம்.

வடக்கு சுவரில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் போர் பெருமையை மறை முகமாக உணர்த்தும் "திரிபுராந்தகரின்" முப்புரம் எரிக்கும் போர் காட்சி. பூமியை தேராக ,வேதங்களை நான்கு குதிரைகளாக பூட்டி, மேருவை வில்லாக கொண்டு சிவந்த ரூபத்துடன் உருட்டும் விழிகளுடன், போர் கோபத்துடன் உஷ்ண மூச்சு பொங்கும் மூக்கு விரிந்திட,வெற்றி பெருக்குடன் புன்சிரிப்பு முருவலிட கம்பீரமாக கால்களை முன் பின் வைத்து வேகமாக ஓடும் தேரின் ஓட்டத்துக்கு ஏற்ற தோற்றத்துடன் சினம் கொண்ட சிவன். சிங்கத்தின் மீது துர்க்கையும், மூஞ்சூறு மீது வினாயகர், மயில் மீது முருகனும் புடை சூழ சிவன் திரிபுராந்தகராக போர் கோலம் பூண்டு செல்கிறான். சிவனின் வரவைக்கண்ட திரிபுர அசுரர்கள் துணிவுடன் எதிர் கொள்கிறார்கள். அவர்களின் காதல் மனைவிகள் கணவர்களை தடுக்கிறார்கள் , அதணையும் மீறி போருக்கு செல்லும் அவர்களின் அறியாமை கண்டு அழுது புலம்பும் ஓலக்காட்சி.
ஒரு போரின் சூழல் குறித்து ,பல போர்களின்வெற்றியையும் , அனுபவத்தை கொண்ட சோழ மன்னர்களின் நேரடி ஆலோசனைகளின் படி இவ்வோவியம் தீட்டப்பட்ட உணர்ச்சி களை இந்த போர்காட்சியில் காணலாம்.குறிப்பாக புகழ்பெற்ற உலக ஓவியங்களில் தஞ்சாவூர் சுதைஓவியத்தில் காணப்படும் போர்க் காட்சிபோல உள்ளீட்டு உணர்ச்சி ததும்பும் ஓவியத்தினை காண்பது அரிது.

இவை அனைத்தும் மிக சுருக்கமான பதிவுதான். முழுமையான ஓவியத் தொகுப்பு இன்னும் சுவை மிக்கது.

மிக அரிதான இந்த ஓவியத்தை மத்திய தொல்பொருள்துறை மிக கவணமாக சீரமைத்து வருவது பாரட்டுக்குரியது.எதிர் காலத்தில் நிச்சயமாக அனைவரும் இவ்வோவியத் தொகுப்பை காணும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.
அன்பு நண்பர்களே ! இந்த பதிவை ஆர்வம் காரணமாக சுருக்கமாகவே எழுத உட்கார்ந்தேன், எந்த குறிப்பையும் கையில் வைத்திராமல். தெரிந்த அனுபவத்தை மட்டுமே கூறியுள்ளேன். சில தவறுகள் இருக்கலாம். பொருத்தருள வேண்டுகிறேன். - ஓவியர் ஆர்.ராஜராஜன்.

No comments:

Post a Comment